இந்தப்பதிவு “அக்ரஹாரத்தில்
கழுதை”
படத்தைப்பற்றிய என் காண் அனுபவம். அந்த படத்தைப் பார்ப்பது கொஞ்சம் அரிது தான்.
படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்று விரும்புபவர்கள் கவனிக்க – இப்பதிவு
படம் பற்றிய தங்கள் தனிப்பட்ட அபிப்பிராயத்தையும் காணனுபவத்தையும் மாற்றக்கூடும்.
இல்லை இந்த படத்தைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தொடருங்கள்.
இது ஜான் ஆப்ரஹாம் என்னும் கலகக்காரனின் படம். தேசிய விருது பெற்ற படம். இணையத்தில் படத்தைப்பற்றியும் இயக்குனரைப்பற்றியும் பலதரப்பட்ட விமர்சனங்களைப் படித்திருந்தேன். முதலாளித்துவத்தையும், சாதிக்கட்டுப்பாடுகளையும், சமூக அறியாமையையும் சாடும் படம் என்ற ஒரு பிம்பம் என் மனதில் உருவாகி இருந்ததால் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாடு செய்திருந்த திரையிடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.
படத்தின் கதை இதுதான்.
லயோலா கல்லூரி ப்ரொபசர் நாராயணசுவாமி ஒரு நாள் வீடு திரும்பும் போது அவர் வீட்டு வாசலில் ஒரு கழுதைக்குட்டி இருக்கிறது. பக்கத்து வீட்டு சிறுவன் அந்த குட்டியின் தாயை ஊரார் அடித்துக்கொன்றுவிட்டதாகச் சொல்ல, பரிவுடன் ப்ரொபசர் அந்த கழுதையை வீட்டுக்குள் கொண்டு செல்கிறார். வீட்டு வேலைக்காரி அவருக்கு மூளை குழம்பிவிட்டதாக புலம்புகிறார். இவரது மாணவர்கள் கழுதையை அஞ்சலி படத்தில் குழந்தை காலில் டின் கட்டி விளையாடுவது போல விளையாடி துன்புறுத்துகின்றனர். ப்ரோபசரைக் கேலி செய்து படம் வரைகின்றனர். இதனால் ப்ரொபசர் தன் சொந்த ஊருக்கு கழுதையைக் கொண்டு செல்கிறார்.
வீட்டில் அவர் அப்பாவிடம் ‘இது என்னிடம் அடைக்கலம் புகுந்த ஜீவன். இதற்கு நாம் தான் அன்பு காட்ட வேண்டும்’ என்று சொல்கிறார். அவர் அப்பாவும் இதை ஏற்றுக்கொண்டு கழுதையை வீட்டில் வைத்துக்கொள்கிறார். ஊரில் இருக்கும் ஊமைப்பெண் உமாவிடம் கழுதையை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்கிறார். அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் ப்ரொபசரைக் கேலி செய்கின்றனர்.
ஊரில் இருக்கும் மூன்று சிறுவர்கள் அந்த கழுதையை வைத்து அட்டகாசம் செய்கின்றனர். ஒரு பாட்டியுன் மீது மோத விடுகின்றனர். பாட்டிக்கு காலில் அடிபடுகிறது. அந்த பாட்டியின் மகன் ப்ரொபசர் அப்பாவைத் திட்டி தீர்க்கிறார். ஹோமம் நடக்கும் ஒரு வீட்டுக்குள் அனுப்பிவிடுகின்றனர். ஹோமம் தடைபடுகிறது. ஹோமம் நடத்தும் ஓமக்குச்சி நரசிம்மன் ப்ரொபசர் அப்பாவிடம் சத்தம் போடுகிறார். பெண் பார்க்கும் படலம் நடக்கும் ஒரு வீட்டுக்குள் அனுப்பிவிடுகின்றனர். மாப்பிள்ளை வீட்டார் முகம் சுளிக்கின்றனர்; தடைபடுகிறது. பெண்ணின் அப்பா ப்ரொபசர் அப்பாவை அர்ச்சிக்கிறார். ஆனால் இதையெல்லாம் சிறுவர்கள் மறைவாக நின்று செய்வதினால், கழுதையே தானாக எல்லா பிரச்சனைகளையும் செய்வது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அக்ரஹாரத்து மக்கள் கழுதையை வெறுக்கின்றனர். சில நாட்கள் கழித்து ப்ரொபசர் ஊர் திரும்பும்போது இதை அறிந்து கொள்கிறார்.
அந்த ஊமைப்பெண் வாழ்வும் பேசப்படுகிறது. அவள் இந்த கழுதையை தன் குழந்தை போல பாவிக்கிறாள். அதை நன்கு பராமரிக்கிறாள். மேய்ச்சலுக்கு கூட்டி செல்கிறாள். அப்பொழுது ஒரு தடியன் அவளிடம் வம்பு செய்கிறான். இறுதியில் இருவருக்கும் உறவு ஏற்பட்டு அவள் கர்ப்பம் ஆகிறாள். இது மிக அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியில் அவன் உமா கையைப் பிடிக்கிறான். அவள் உதறிச்செல்கிறாள். அடுத்த காட்சியில் அவள் தயக்கத்தோடு உதறுகிறாள். அடுத்து அவள் அவனோடு மறைவாகச் செல்கிறாள். ஆனால் அவன் அவளை விட்டுப்போய்விடுகிறான். அதற்குபிறகு அவன் படத்தில் வருவதே இல்லை.
ஒரு முறை பிராமணர்கள் கழுதையை வண்ணானிடம் கொடுக்கின்றனர். ப்ரொபசர் ஊருக்கு வரும் போது மீட்கிறார்.
அடுத்த முறை ப்ரொபசர் ஊருக்கு வரும்போது அவருடைய தம்பியும் தம்பி மனைவியும் வருகின்றனர். தம்பி மனைவிக்கு குழந்தை இல்லை என்கிற குறை. அவரும் கழுதை வீட்டில் இருப்பதை எதிர்க்கிறார். ஆனால் ப்ரொபசர் தம்பி வந்திருக்கும் நாலு நாளில் எதற்கு பிரச்சினை என்று அடக்கிவிடுகிறார்.
ஓரிரவு உமாவிற்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் இறந்து பிறக்கிறது. உமாவின் அம்மா குழந்தையை கோயிலில் போட்டுவிடுகிறார். காலையில் பூசாரி குழந்தை உடலைப்பார்த்துவிட்டு அக்ரஹாரத்திற்கு ஓடுகிறார். அக்ரஹார பிராமணர்கள் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி குழந்தை யாருடையது என்று அறிய முற்படுகின்றனர். உமாவின் தாயை விசாரிக்கும்போது அவள் ‘இரவில் குழந்தை பிறந்தது. காலையில் காணோம். இந்த கழுதை தான் குழந்தையைக்கொன்று இங்கு போட்டு விட்டது’ என்கிறார். இதை முதலில் பிராமணர்கள் நம்பவில்லை. மறுபடியும் விசாரிக்கின்றனர். கிழவி அதே கதையைக் கூறுகிறார். இதனால் பிராமணர்கள் கழுதையைக் கொல்வதாக முடிவு செய்கின்றனர். ஊரில் இருக்கும் சில ஒடுக்கப்பட்ட மக்களிடம் சொல்கின்றனர். அவர்கள் மலை மேல் வைத்து கழுதையை அடித்துகொல்கின்றனர். இங்கு ஒரு முக்கியமான காட்சி உள்ளது. கொன்று விட்டு வரும் மக்களிடம் பிராமணர்கள் எட்ட நின்று காசைத் தூக்கி எரிகின்றனர். சாதி ஆதிக்கத்தின் வழக்கத்தை நாசூக்காக இக்காட்சியில் படம் பிடித்திருந்தார் ஜான்.
கழுதையை கொல்லச்சொன்ன பிராமணர் மன உளைச்சலால் தவிக்கிறார். தன் தவறை எண்ணி வருந்துகிறார். ஆனால் கழுதையை வெறுத்த அனைவருக்கும் நல்லது நடக்கின்றது. சிறு வயதில் காணாமல் போன அவர் மகன் ஊர் திரும்புகிறான். ப்ரொபசரின் தம்பி மனைவி கர்ப்பமாகிறாள். கழுதையால் நின்ற திருமணம் நடக்கிறது. கழுதையின் ஆவி அது இறந்த மலையில் உலாவுவதாக ஊர் முழுக்க பேச்சாகிறது. இதனால் ஊரார் உடனே கழுதையை தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். கழுதையை அடித்து துரத்திய ஓமக்குச்சி நரசிம்மன் ‘அது வந்தவுடனே அது தெய்வாம்சம் மிக்கது’ என்று தான் நினைத்ததாக சிலாகிக்கிறார். ஏதோ கழுதை உயிர்த்தியாகம் செய்து அவர்கள் பிரச்சினைகளை தீர்த்தது போல எண்ணுகின்றனர். அதற்கு கோவில் கட்டவேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.
ஊருக்கு வரும் ப்ரொபசர் இதை அறிந்து கொள்கிறார். கழுதையை வைத்து கலகம் செய்த சிறுவனே அவரிடம் சொல்கிறான். ஆனால் கடைசிவரை அவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தெரிவதே இல்லை. கொண்டவனும் போய், குழந்தையும் போய், இப்பொழுது கழுதையும் போன உமா வாழ்க்கை வெறுத்து ஊரில் இருக்கிறாள். கழுதையை அடித்துக்கொன்ற மக்களை ப்ரொபசர் மலைக்கு அழைத்துச்சென்று கழுதையின் மண்டை ஓட்டைத்தருகிறார். அவர்கள் பவ்யமாக அதை வாங்கிக்கொண்டு அதை எரித்து இறுதி ஊர்வலம் போகின்றனர். பாவ மன்னிப்பு அடைந்த சந்தோஷத்துடன் அவர்கள், ப்ரொபசர், உமா எல்லாரும் சேர்ந்து அக்ரஹாரத்தை தீயிட்டுக் கொளுத்துகின்றனர்.
அவ்ளோதான்.
படம் ஒரு அறிவாளித் தளத்திலயே இயங்குகின்றது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். கழுதையையும் உமாவையும் ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக ஜான் பயன்படுத்தியிருக்கிறார். அப்படி என்றாலும் பல இடங்களில் தர்க்க ரீதியாக ‘அக்ரஹாரத்தில் கழுதை’ உதைக்கிறது. முதலில் ப்ரொபசரை நாம் ஆதிக்கசாதி கூட்டத்தில் இருந்து எடுத்து விடலாம். ஏனெனில் அவர் ஒரு சீர்திருத்தவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
ப்ரொபசர் அவர் வீட்டுக்கு கழுதையை கொண்டு வரும்போது அந்த வீட்டு வேலைக்காரி கழுதை மலத்தை கழுவ மாட்டேன் என்கிறாள். அவள் ப்ரொபசருக்கு புத்தி கெட்டு விட்டது என்கிறாள். அக்ரஹாரத்தில் பிராமணர்கள் கழுதை வந்ததும் அதை ஏளனமாகப் பார்க்கின்றனரே ஒழிய கழுதையையோ ப்ரொபசரையோ துன்புறுத்தவில்லை. அவர்கள் கழுதையை வெறுக்க ஆரம்பிப்பதே அதனால் ஏற்படும் தடங்கல்களால் தான். இன்னொரு முக்கியமான விஷயம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது ஒரு பிராமணர் ப்ரொபசரின் அப்பாவிடம் வந்து சண்டையிடும் பொழுது “கழுதையை மத்தவாளுக்கு பிரச்சனை இல்லாம வளர்க்கத் தெரியலனா எதுக்கு வளர்க்குறீரும்?” என்று கத்தி விட்டுப்போவார். இந்த வசனத்தால் தெளிவாவது என்னவென்றால் கழுதையால் வருவதாக நினைக்கப்படும் தடங்கலால் தான் கழுதை மீது வெறுப்பே ஒழிய, மற்றபடி கழுதையை அவர்கள் முதலில் இருந்தே ஒதுக்கவில்லை.
இன்றைய காலகட்டத்தில் தெருவில் திரியும் ஒரு நாயால் இந்த பிரச்சனைகள் வந்திருந்தால் அந்த நாய்க்கும் இதே கதிதான். இது அடிப்படையில் விலங்குகளிடம் இருந்து இந்த உலகைப் பறித்துக் கொண்ட மனித இனத்தின் குறைபாடு. தெருவில் இருக்கும் விலங்கு தன் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தால் கூட கல்லெடுத்து எரியும் மனிதஜாதியின் அயோக்கியத்தனம்.
2. கழுதையை கொல்ல வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தது தவறு. ஆனால் அது ஜீவகாருண்ய அடிப்படையிலான தவறே ஒழிய, ஜாதிய தவறாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால், ஒரு முறைக்கு இரு முறை உமாவின் அம்மாவை அழைத்து அக்ரஹாரத்து பிராமணர்கள் விசாரிக்கின்றனர். அவர் முதலில் சொன்னதை நம்பவில்லை, கழுதை எப்படி குழந்தையை கோயிலில் கொண்டு வந்து போடும் என்று இரண்டாம் முறை விசாரிக்கும் பொழுது கேட்கின்றனர். கழுதைக்கு எதிராக பொய் சொன்ன அந்தக் கிழவியின் பேச்சை இறுதியில் நம்பி, மிகத் தவறானதொரு முடிவை எடுக்கின்றனர். அதனால் கழுதையைக் கொல்ல வேண்டும் என்ற முடிவிற்கு அந்த கிழவி சொன்ன பொய்யும் காரணமாகத் தான் இருக்கிறது. குற்றவாளிக்கூண்டில் அந்த கிழவியும் ஏற்றப்பட வேண்டும். ஆனால் ஜான் இதை புறந்தள்ளி விடுகிறார்.
3. ஒருவேளை அந்தக்கிழவி பிராமணர்களுக்கு பயந்து அவ்வாறு பொய்யுரைத்தார் என்று எடுத்துக்கொண்டாலும், படத்தின் முடிவு நியாயமாக இல்லை. கழுதையைக் கொன்ற மக்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது மூலம் பாவ மன்னிப்பு வழங்கப்படுவதாக காட்டப்படுகிறது. ஆனால் கொல்லச் சொன்னவர்களுக்கு அப்படி எதுவும் வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கும் அக்ரஹார தலைவர் அவர் செயல் உணர்ந்து வருந்துகிறார். ஆனால் மன்னிப்பின்றி அவர் தீயிட்டு கொளுத்தப்படுகிறார்.
ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறைகளுக்குத் தீர்வு அவர்களை மொத்தமாக கொன்றொழிப்பது ஆகாது. அவர்களின் அறியாமையை அழிப்பதுவே ஆகும். இங்கு தான் இயக்குனர் வாய்ப்பு இருந்தும் தவறுகிறார். கழுதையின் ஆவியைப் பார்த்ததாக நினைக்கும் அக்ரஹாரத்தினர் கழுதைக்கு கோவில் கட்ட முனைகின்றனர். இங்கு அவர்களின் அறியாமை வேண்டும்மட்டும் கேலி செய்யப்பட்டுள்ளது. அதை அவ்வாறே கொண்டு சென்றிருக்கலாம். கழுதைக்கு கோயில் கட்டுவதாகக் காட்டிவிட்டு ப்ரொபசரும் உமாவும் அந்த கோயிலை இடித்து விட்டு, ப்ரொபசர் உமாவைத் தன்னோடு நகருக்கு அழைத்துச் செல்வதாக காட்டியிருக்கலாம். ஏனெனில் அந்த கோயில் தான் அம்மக்களின் அறியாமையின் சின்னமாக, அவர்கள் கொலையின் உச்சமாக இருந்திருக்கும். அதை விடுத்து அக்ராஹாரத்தை எரிப்பது ஒருதலைப்பட்சமான முடிவாக உள்ளது. இந்தப்படம் எடுக்கப்பட்ட காலகட்டம் ஒரு காரணமாக கூறப்படலாம். எந்த காலகட்டத்திலுமே சமூக பிரச்சினைகளுக்கு ஒரு பிரிவை கொல்வது தீர்வாகாது. அது சமூகத்தை ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கு எடுத்துச்செல்லாது.
ஜான் தனக்கென்று ஒரு சித்தாந்தத்தையும் சில கற்பிதங்களையும் வைத்து தான் படம் எடுத்தார் என்று வந்திருந்த சிறப்பு விருந்தினர் கூறினார். ஒரு சமூகத்தின் அறியாமையை படம்பிடித்து காட்டும் பொழுது பாரபட்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையை அப்படியே காட்டினாலேயே போதுமானது. என்னைப்போன்ற அடுத்த தலைமுறை அறிய விரும்புவதும், கற்றுக்கொள்ள விரும்புவதும் கலைப்படைப்புகளிடம் எதிர்பார்ப்பதும் அதுதான். இது போன்ற பாரபட்சம் உள்ளே நுழையும்போது, அப்படைப்புகள் மனதில் ஒட்டாமல் தோற்றுவிடுகின்றன. வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ஸ்க்ரிப்ட்டை ஜான் கெடுத்துவிட்டதாக வெங்கட் சுவாமிநாதன் அவர்களே கூறினார் என்று படித்த ஞாபகம். ஒருவேளை அந்த ஸ்கிரிப்ட்டை படித்தால் மூலக்கதை தெரிய வரலாம்.
படம் முடிந்ததும் கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் சொன்ன கருத்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “படத்தில் வரும் ப்ரொபசர் வீட்டு வேலைக்காரி கழுதை மலத்தை அள்ள மறுக்கிறாள். ஆனால் ப்ரொபசர் அதை அள்ளிக்கொண்டு வெளியே போடுகிறார். இதனால் பிராமணர்களுக்குத் தான் விலங்குகளிடம் அன்பும் பரிவும் உள்ளது போல காட்டியுள்ளதை ஒப்புக்கொள்ள முடியாது” என்றார். எப்புடி தான் யோசிக்கிறாங்களோ? அந்த வேலைக்காரி மலத்தை அள்ளியிருந்தாலாவது ‘தான் கொண்டு வந்த கழுதையின் மலத்தை வேலைக்காரிக்கு பிடிக்காத போதும் ப்ரொபசர் அள்ள வைத்தார்’ என்று மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் வேலைக்காரி மறுத்தபின் அவள் அருவருப்பை புரிந்து கொண்டு, தான் வளர்க்கும் கழுதை என்ற பொறுப்பினை ஏற்று ப்ரொபசரே சுத்தம் செய்தார். இது கூடாதா??
ப்ரொபசர் வேலை செய்யும் கல்லூரியின் முதல்வராக வரும் கிறிஸ்துவப் பாதிரியார் கல்லூரியின் கட்டுப்பாட்டிற்கும் மாணவர் ஒழுக்கத்திற்கும் கழுதை தடங்கலாக இருக்கும் என்று கூறுகிறார். ப்ரொபசர் கழுதையை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கிறார். பாலா கூறுவது போலப் பார்த்தால் புனித மேய்ப்பனை பின்பற்றும் அப்பாதிரியார் கழுதை வளர்ப்பதை ஆட்சேபிப்பதால், கிறிஸ்துவர்கள் அனைவரும் விலங்குகளிடம் அன்பில்லாதவர்கள் என்று காட்டப்படுகிறதா என்ன? உண்மையில் பார்த்தால் கழுதையை ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாக நிலைநிறுத்த ஜான் தவறியிருக்கிறார். அந்த ஊமைப்பெண்ணையே இதற்கு இன்னும் விரிவாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ‘அக்ராஹாராத்தில் ஊமைப்பெண்’ என்பது புரட்சிகரமாக இல்லை என்று ஜான் நினைத்திருக்கலாம். மனிதர்கள் விலங்குகளிடம் காட்டும் குரோதத்தையே அந்தக் கழுதை மூலமாக சொல்ல வருகிறார்களோ என்று எண்ணினாலும் ஒருதலைப்பட்சமான இறுதிக்காட்சி அந்த எண்ணத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது.
முதலிலே சொன்னது போல இது படத்தைப்பற்றிய என்னுடைய பார்வை மட்டுமே. உங்களுக்கு இந்தப்படம் பிடிக்க வாய்ப்பிருக்கலாம். விருப்பமிருந்தால் பார்க்கவும்.

அருமை டா நண்பா.....நல்லதோர் விமர்சனம்...!!
ReplyDelete