இன்றைய சமுதாயத்தில் மிகவும் ஆழமாக ஊடுருவியிருக்கும்
இரண்டு விஷயங்கள் – கடவுள், சாராயம். இவற்றை விரும்பும் மக்களின் எண்ணிக்கையில்
வேறுபாடு இருந்தாலும் சமூகத்தில் இவற்றின் தாக்கம் அசைக்க முடியாதது. மதுரை
பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் கூட ஒரு டாஸ்மாக் கடை இருப்பதைப் பார்த்த
பின்தான் இந்த இரண்டு விஷயங்களும் நம் சமூகத்தில் நிறைய ஒற்றுமைகளுடன் இருப்பதை
உணர்ந்தேன்.
இப்படி சாமியையும் சாராயத்தையும் ஒப்பிடலாமா
என்றால், சாமிக்கே சாராயத்தை படையலாக்கும் போது அவை இரண்டையும் கண்டிப்பாக
ஒப்பிடலாம். அதற்காக நான் நாத்திகனும் அல்லன். கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது. ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தான் புரியவில்லை. அது போல
நான் சாராயம் குடிப்பதும் இல்லை. இதில் சரக்கு பற்றிய என்னுடைய அவதானிப்புகள் அனைத்தும்
பார்த்தது, கேட்டது மற்றும் படித்ததை வைத்து மட்டுமே. தவறுகள் இருந்தால் ‘குடிமக்கள்’
மன்னித்தருள வேண்டும். சுருக்கமாக, “நான் சாப்பிட்ட இட்லி குஷ்பூ போல மிருதுவாக
இருந்தது” என்று கூறுவது போல தான் இதுவும். இட்லி மட்டும் தான் எனக்குப்
பிடிக்கும்; நான் சாப்பிட்டிருக்கிறேன். குஷ்புவுடன் எனக்கு நேரில் பரிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. அவரைப் பார்த்திருந்தால் அல்லது அறிந்திருந்தால் போதும்.
கஷ்டங்களின் போது நாம் செல்வது.
சந்தோஷத்தில் இருக்கும் போது கூட கடவுளிடம் போகாமல்
இருக்கும் மனிதன், கஷ்டத்தில் இருக்கும் போது கண்டிப்பாக கடவுளிடம் செல்வான்.
‘சாமி கும்புடு, இல்லாட்டி உம்மாச்சி கண்ணை குத்திரும்’ என்று பார்வையை காப்பாற்ற
வேண்டி நாம் கடவுளை வழிபட பழக்கப்படுத்தப்பட்டிருந்தாலும், கஷ்டம் என்று வரும்
போது நாம் கண்டிப்பாக கடவுளிடம் பேரம் பேச ஆரம்பித்து விடுகின்றோம்.
பொழுதுபோக்கிற்காகவும், சந்தோஷத்திலும்
சரக்கடிப்பது உண்மை என்றாலும், கஷ்டம் என்று வரும் போது சாராயம் மறுக்க முடியாத
புகலிடம் ஆகி விடுகிறது பழக்கமுடையவர்களுக்கு. கஷ்டங்களுக்கு பதில் கிடைக்காது
என்றாலும் கஷ்டங்களை மறக்கும் சாதனமாக சொல்லப்படுகிறது.
உன்னத நிலையை அடையும் வழி
கடவுளை வழிபடுவதே ஓர் உன்னத நிலையை அடையத்தான்
என்று கூறுப்படுகிறது. இந்த நிலை மோட்சம், சொர்க்கம் என்று வேறு பெயர்களில் அறியப்பட்டாலும்
குறிக்கோள் இந்த நிலையை நோக்கி தான் உள்ளது. அதீத பக்தியால் கடவுளோடு மிகவும்
ஒன்றுபவர்களுக்கு ‘அருள்’ வந்து சாமியாடுவது, அருள் வாக்கு கூறுவது என்னும்
தன்னிலை மறந்த நிலையில் தங்களைக் கடவுளோடு கலக்கிறார்கள்.
குடிக்கும்போது ஒருவன் உளற ஆரம்பிக்கிறான்.
உளறல் என்று நாம் கொண்டாலும் இவை அனைத்துமே ஆழ்மன உண்மைகள் தான்.
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின்
தலை.”
என்னும் குறளுக்கு ஏற்ப தவத்தையும் தானத்தையும்
உள்ளடக்கிய உன்னத நிலையான பொய்யா நிலைக்குச் செல்கிறான். உடலில் நோயை
ஏற்றிக்கொண்டு, மனதில் உள்ள அழுக்குகளைத் துடைக்க முற்படுகின்றான். (அதற்காக குடி
போதையில் நடக்கும் குற்றங்களை நியாயப்படுத்தவில்லை.)
உன்னத நிலைக்குப்பின் உடல் வலி
அருள் வந்து சாமியாடுபவர்களை பார்த்திருப்பதால்
இது எனக்கு நன்கு தெரியும். எல்லாம் முடிந்த பின் குறைந்தபட்சம் இரண்டு
நாட்களுக்கு உடல் வலி இருக்கும்.
சரக்கு அடித்த மறுநாள் காலையில் மிளகாய்ப்பொடி
கண்களும் மண்டையை பிளக்கும் தலைவலியுமாய் படுத்திவிடும் என்று அறிந்திருக்கிறேன்.
எங்கும் இருக்கும் வீடுகள்
கடவுள் எங்கும் இருக்கிறார். அதில் சந்தேகம்
இல்லை. ஆனால் அவருக்கு கட்டப்படும் வீடுகள் நம் தெருக்களில் நிரம்பி வழிகின்றன.
தடுக்கி விழுந்தால் தென்படுவன கோயில்கள் தான். “ஆறு இல்லாத ஊரிலே குடியிருக்காதே”
என்று பழமொழியை வைத்து, ஒவ்வொரு ஊர் ஆற்றங்கரை ஓரமும் ஒரு அரசமரத்தையும் வைத்து
அதில் பிள்ளையாரையும் அமர்த்தியவர்கள் நாம். இன்னமும் கூட முகவரி சொல்லும் போது
பிள்ளையார் கோயில் தான் பல தெருக்களின் சின்னமாக அமைகிறது. என் வீட்டிலிருந்து
குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் பத்து நிமிட தூரத்தில் சிறியது
பெரியதுமாக 3-4 கோயில்கள், ஒரு சர்ச், ஒரு
மசூதி உள்ளன. அதனால் தடுக்கி விழுந்தால் விழுகிற இடம் கடவுளின் இருப்பிடமாக
உள்ளது.
அரசே டாஸ்மாக் கட்டுப்பாட்டில் சாராய
வியாபாரத்தை எடுத்த பின்னர் எண்ணிக்கையில் கோயில்களோடு டாஸ்மாக் கடைகள் போட்டி போட
ஆரம்பித்து விட்டன. நிறைய பேருந்து நிறுத்தங்களின் அருகில் டாஸ்மாக் கடைகள் வந்து
விட்டன. மதுரை பெரியார் பேருந்து நிலையம் உள்ளேயே ஒன்று உள்ளது. குரோம்பேட்டையில்
இருந்து தாம்பரம் செல்லும் வழியில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒன்று உள்ளது.
இவ்வளவு ஏன்? ஒரு முறை என் அலுவலகத்திற்கு அரை மணி நேரம் வழி தெரியாது திணறிய கால்
டாக்ஸிக்காரர், கடைசியில் அதை கண்டுபிடித்ததே “டாஸ்மாக் எதித்த பில்டிங்” என்னும்
மந்திரச் சொற்களால் தான். இன்னும் மால்களுக்குள் அரசே டாஸ்மாக் கடைகளை திறப்பது
ஒன்று தான் பாக்கி என்று நினைக்கிறேன். குடிக்கிற தண்ணீர் இருக்கோ இல்லையோ, எல்லா
இடங்களிலும் அடிக்கிற தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை.
பணக்கார வியாபாரம்
என்ன தான் கடவுள் பக்தி என்பது ஆன்மிகமும்
நம்பிக்கையும் சார்ந்த விஷயமாக இருந்தாலும் நாம் அதை வியாபாரமாக்கி விட்டோம். திருப்பதி
வெங்கடாசலபதி வருடம் ஐம்பதாயிரம் கோடி சம்பாதித்தும் இன்னும் கடனில் இருக்கிறார்.
பத்மநாபர் ஒரு லட்சம் கோடியை தாண்டி போய்க்கொண்டிருக்கிறார். இது போதாதென்று
மக்களின் கடவுள் நம்பிக்கையைச் சுரண்டியே பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கடவுள் இல்லன்னு சொல்றவன் கிட்ட பணம் இல்லாம இருக்கலாம். கடவுள் இருக்குன்னு
சொல்றவன் கிட்ட கூட பணம் இல்லாம இருக்கலாம். ஆனா நான் தான் கடவுள்னு சொல்றவன்
கிட்ட கண்டிப்பா பணம் இருக்கும்.
டாஸ்மாக்கின் வருமானம் வருமாறு.
| ஆண்டு | வருமானம் (கோடிகளில்) |
| 2003-04 | 3639.93 |
| 2004-05 | 4872.03 |
| 2005-06 | 6030.77 |
| 2006-07 | 7473.61 |
| 20070-08 | 8821.16 |
| 2008-09 | 10601.50 |
| 2009-10 | 12498.22 |
| 2010-11 | 14965.42 |
| 2011-12 | 18081.16 |
அடேங்கப்பா!!
அந்தஸ்தையும் பணத்தையும் பொறுத்தது
கடவுள் என்பது எல்லோருக்கும் பொது என்றாலும்
கடவுளிலேயே பல வகைகள் உண்டு. மக்களைப் பொறுத்து தான் அவர்கள் வணங்கும் கடவுளும்
உண்டு. கிராமங்களில் பார்த்தால் எல்லோரும் ஊருக்கு வெளியே ஊரைக்காப்பவராக
அய்யனாரையும் மதுரை வீரனையும் வணங்கினர். வருடம் ஒரு முறை கிடா வெட்டி சாராயம்
படைத்து தங்களுக்கு பிடித்ததை கடவுளுக்கும் கொடுத்தனர். கொஞ்சம் மேல் தட்டு மக்கள்
அம்மனையும் முருகனையும் வணங்கினர். மலை ஏறி கோயில்கள் சென்று வழிபட்டனர். உயரடுக்கு
மக்கள் ராமர், அனுமார், வெங்கடாசலபதி என்று வணங்கினர். பெரிய பெரிய கோயில்கள்
கட்டி கீழடுக்கு மக்களை புறக்கணித்து ஜம்பம் காட்டினர். அதே போல தான் இப்பொழுது
தரிசன வியாபாரமும். கடவுள் முன் எல்லோரும் ஒன்று என்றாலும் அது கோயில்களில்
நடைமுறையில் இல்லை. ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுக்க தயாராக இருந்தால் கடவுளை மிக
அருகிலயே அர்ச்சகரோடு அர்ச்சகராக தரிசிக்கலாம்; மாலை மரியாதைகள் பெறலாம்; பின்னே
வரிசையில் நிற்பவர்களின் வயிற்றெரிச்சலோடு சேர்த்து. இதில் சிலருக்கு அப்பொழுது
தான் ஒன்று விட்ட சித்தப்பா பையனின் மச்சினர் சம்பந்தி ஏதாவது பெரிய அரசாங்க
உத்தியோகத்தில் இருப்பது ஞாபகம் வந்து, அவர் பெயர் மறந்தாலும், “நாங்கள்லாம்
ரிலேஷன்ஸ்” என்று பெருமை பேசி இலவசமாக முன்னே செல்ல முயல்வர்.
சாராயமும் இப்படி தான். காசில்லாதவன் மரத்திலிருந்து கள் இறக்கிக்
குடித்தான். அது தடையானதும், ஊர் ஓரம் காய்ச்சினான். இன்னும் காசு படைத்தவன் ரம்,
பீர், விஸ்கி என்று ஆரம்பித்தான். அதிலேயே குவாட்டர், ஹாஃப், ஃபுல் என்று காசுக்கு
ஏற்று பிரித்தான். பண முதலைகள் ஸ்காட்ச்சில் நீந்துகிறான்; டக்கீலாவில்
தத்தளிகிறான். அரசும் இப்பொழுது வசதியாக ‘எலைட்’ (Elite) டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளது. பணத்துக்கு ஏற்ற
கடைக்கு சென்று குடித்து விட்டு வரலாம். சரக்கின் தரமும் அப்படியே இருக்கும். அடுத்து
அரசின் காபரே பார்கள், பப்புகள் கூட வரலாம். ஹோம் டெலிவரி கூட செய்யலாம். யார்
கண்டது?
எப்பொழுதும் கூட்டம்; எல்லோருக்கும் பயன்
கோயில்களில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே
தான் இருக்கும். சாலையோர பிள்ளையார் என்றாலும் நடந்து செல்கிறவர் முதல் காரில்
செல்கிறவர் வரை நின்று கன்னத்தில் போட்டுகொள்வது உண்டு. கோயிலுக்குச் சென்று
தரிசிக்காமல் வருவது பாவம் என்றே கருதப்படுகிறது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும்
எல்லோருக்கும் தரிசனம் உண்டு. ஆனால் நம் மக்கள் தான் அது தெரியாத மாதிரி நடந்து
கொள்வர். கடவுளின் அருள் என்ன கார்ப்பரேஷன் குழாயில் வரும் தண்ணீரா பத்து நிமிடம்
தாமதாக போனால் நின்று விடுவதற்கு? முண்டி அடித்து, கம்பிகளில் ஏறி, மிதித்துத்
தள்ளி, குழந்தைகள் நசுங்கி, உசைன் போல்ட் ஓட்டங்கள் ஓடி, எல்லா சாகசமும் செய்து
முதல் ஆளாக தரிசனம் செய்ய 'மன்னன்' ரஜினி போல பறக்கின்றனர். அதுவும் தரிசிக்கும்
போது முன்னே இருப்பவரின் முதுகில் ஏறாத குறையாக எம்பி நின்று, அர்ச்சகரிடம்
மல்லுகட்டி கூடுதலாக ஐந்து வினாடிகள் பார்க்கிறோம். கடவுள் சிலையை அதிக நேரம்
பார்த்தால் தான் அதிக அருள் நம் உடம்பில் ஒட்டிக்கொள்ளுமா?
நானும் இங்கு அருகில் இருக்கும் டாஸ்மாக்
கடைகளில் பார்த்து விட்டேன். எப்பொழுதுமே கூட்டம் இருக்கும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும்
மக்கள் வாங்கிக்கொண்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். சரக்கு தீர்ந்தால் சண்டை
இடுகின்றனர் அல்லது அடுத்த பேருந்து நிறுத்தம் செல்கின்றனர். யாருமே நாளைக்கு
குடிக்கலாம் என்று வீடு திரும்புவது கிடையாது. இது என்ன அவர்கள் கடைப்பிடிக்கும்
விதியா?
முகவர்கள் உண்டு. சம்பந்தம் இருக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை.
கடவுளுக்கு எப்பொழுதுமே நம் சமூகத்தில்
முகவர்கள் வைத்துள்ளோம். அவர்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று
நம்புகிறோம். ஆனால் அது அவசியம் இல்லை. அதனால் தானோ என்னவோ நித்யானந்தா எல்லாம்
மதுரை ஆதீனம் ஆகும் கொடுமை நிகழ்ந்துள்ளது.
விஜய் டிவி ‘நீயா நானா’வில் வீடு வாடகைக்கு
எடுப்போரின் கஷ்டங்கள் பற்றி பேசும் போது டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் ஒருவர்
தான் குடிப்பழக்கம் இல்லாதவர் ஆனாலும் தன் பணியிடம் காரணமாக வீடு கிடைக்கவில்லை
என்று வருந்தினார். டாஸ்மாக் கடையில் வேலை செய்தால் மொடாக்குடியனாக இருக்க
வேண்டுமா? நமது மக்களுக்கு சாராயம் வேண்டும். அதை விற்பவர்கள் வேண்டாம். சாராயம்
தீட்டு இல்லை. ஆனால் அதை விற்பவர் தீட்டு போல.
பெண்களின் ஒழுக்கப்பிரச்சனையாகப்
பார்க்கப்படுகிறது.
கடவுள் நம்பிக்கை என்பது ஆண்களிடம் இல்லை
என்றாலும் பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டும் என்று நமது சமுதாயம் விரும்புகிறது.
அப்படி தான் பெண்களையே வளர்க்கிறோம். பெண்கள் பார்ப்பதற்கே மகாலக்ஷ்மி போல இருக்க
வேண்டும் என்று அளவுகோல் வைக்கிறோம். ஆனால் ஆண் யாரும் பரமசிவன் போலவோ, பிரம்மா
போலவோ இருக்க வேண்டும் என்று நாம் கூறுவதில்லை. அப்படி பெண் இருந்தால்
மதிக்கப்படுவாள் என்று கூறிக்கொண்டு வந்துள்ளோம். கடவுளை நம்பாத, கோயிலுக்குச்
செல்லாத பெண்ணை எந்த சராசரி குடும்பமும் மருமகளாக ஏற்றுக்கொள்ளாது. அப்படி
இருக்கும் பெண் திமிர் பிடித்தவளாகத்தான் பார்க்கப்படுவாளே ஒழிய முற்போக்கு
சிந்தனையாளராக பார்ப்போமா என்று தெரியவில்லை.
சிறு வயது முதலே கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடாது
என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்த்தாலும் ஒரு ஆண் குடிக்க ஆரம்பித்தால்
பெரிதாக கண்டுகொள்வதில்லை. பணக்கார வியாபார வட்டாரங்களில் அது ஒரு அந்தஸ்தாகவே
பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண் குடித்தால் அவளை ஒழுக்கமற்றவளாக சித்தரிக்கத்
தயங்குவதில்லை. யார் குடிப்பதானாலும் உடல்நலக்கேடு என்று பார்க்காமல் ஆணுக்கு ஒரு
விதியையும் பெண்ணுக்கு இன்னொரு விதியையும் இதிலும் நாம் சமுதாயத்தில்
எழுதியுள்ளோம். குடிக்கும் விஷயத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்று இல்லை.
தாய்மை அடையும் பொழுது ஃபீட்டல் ஆல்கஹால் சிண்ட்ரோம் (Fetal AlcoholSyndrome) முதலிய
குடிப்பழக்கம் சம்பந்தப்பட்ட நோய்களால் குழந்தை பாதிக்கப்படலாம். ஆனால் இதை
எல்லாம் கருத்தில் கொள்ளாது ‘ஆணை போலவே நானும் எல்லாம்
செய்து காட்டுவேன்’ என்று பெண்களும் பரவலாக குடிப்பது ஒரு
வருத்தம் தான்.
எனக்குத் தோன்றியவை இவ்வளவு தான். இது முழுக்க முழுக்க
எனது தனி மனித அவதானிப்பே; முயற்சியே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை
எழுதவில்லை. அதையும் மீறி புண்பட்டிருந்தால் சாராயத்தை குடித்துப் புண்ணை
ஆற்றுங்கள். பழக்கம் இல்லாதவர்கள் கடவுள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று
வேண்டிக்கொள்ளுங்கள். இல்லை என்றால் புண்பட காரணமே இல்லை. சிரிக்க முயலுங்கள்.
சுருக்கமாக, “நான் சாப்பிட்ட இட்லி குஷ்பூ போல மிருதுவாக இருந்தது” என்று கூறுவது போல தான் இதுவும்.
ReplyDeleteSema :)