உண்மையில் இந்த படத்தைப் பார்த்து விட்டு வெளியே
வந்ததும் நம் மனதில் தோன்றுவது “இது உலகத்தரத்திற்கான ஓர் இந்தியத்தயாரிப்பு.” அதே
போல படமும் நல்ல படம் தான். அதுவும் இப்பொழுது 2012-ல் வந்துள்ள படங்களை வைத்துப் பார்க்கும்போது
இது நிச்சயமாக இரண்டு படி மேலே நிற்கிறது.
கதை மிக எளிதானது தான். ஒரு ஏழை இளைஞனின் காதல்.
ஒரு பணக்கார இளைஞனின் காமம். இவை சந்திப்பதும், ஒன்று வஞ்சிக்கப்படுவதும்,
விசாரணையும் பிறகு வஞ்சம் தீர்ப்பதும் தான். இயக்குனர் பாலாஜி சக்திவேல் புதிய
திரைக்கதை யுக்தியை கையாண்டிருக்கிறார். ‘காதல்’ திரைப்படத்தில் Non linear முறையில் கதை சொன்னவர் இப்பொழுது “ரஷோமொன்” முறையில்
எடுத்திருக்கிறார். அதாவது ஒரே கதையின் சம்பவங்களை வெவ்வேறு மனிதர்கள் தங்கள்
பார்வையில் விவரிக்கின்றனர். “விருமாண்டி” படம் பார்த்தவர்களுக்குப் புரியும்.
போலீஸ் விசாரணையில் தொடங்குகிறது படம். முதலில்
அந்த ஏழை இளைஞன் விசாரிக்கப்படுகிறான். முதல் பாதி அவன் பார்வையில் நகர்கிறது.
நாம் தினமும் கடந்து விட்டுச்செல்கின்ற சாலையோர கையேந்தி பவனில் வேலை
பார்க்கிறான். அவன் பெற்றோர் இறந்தது கூட தெரியாமல் வடநாட்டில் முறுக்கு பிழிபவனாக
வேலை பார்ப்பது எல்லாம் அப்படியே “அங்காடித் தெரு” படத்தை மறுபடியும் பார்ப்பது
போல இருக்கிறது. இந்தப்பகுதியில் ஒருவருக்கும் நடிக்கத்தெரியாதது எரிச்சலைத்தான்
தருகிறது. “காதல்” படத்தில் யார் யாரை எல்லாமோ அற்புதமாக நடிக்க வைத்த இயக்குனர் இவ்வளவு
மொக்கையான நடிப்பில் எப்படி சமரசம் செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
அடுத்த பாதி பள்ளி மாணவி பார்வையில் விரிகிறது.
உண்மைகள் வெளிவருகின்றன. விசாரணையும் அதன் திருப்பங்களும் தான் மீதிக்கதை. கதை
இங்கு வேண்டாம். தியேட்டரில் பாருங்கள்.
படம் முழுக்க பல குறியீடுகள் உள்ளன. நித்யானந்தா
படம், படம் முழுக்க வரும் பாட்டில், இன்ஸ்பெக்டர் தூயஇருதயத்தின் மகன் பொறுக்கியாக
இருப்பது, பணக்காரப்பையன் கேட்கும் சந்தேகமே இறுதியில் வினையாக முடிவது,
மறைக்கப்பட்ட எம்.எல்.ஏ முகம் என்று. பதின்மத்தில் தடுமாறும் பள்ளி மாணவி
தனியறையில் தன் உடலழகை ரசிப்பதை பொறுப்புடன் விரசமில்லாது படமாக்கியுள்ளார்.
நன்று.
படத்தில் வரும் நடிகர்கள் அனைவரும் மிக அருமையாக
நடித்துள்ளனர். குறிப்பாக அந்த இன்ஸ்பெக்டர், சின்னச்சாமி, பணக்கார இளைஞன்.
மிகுந்த அசட்டையோடு வரும் அந்த இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் இறுதியில் எல்லா
காய்களையும் தனக்கு சாதகமாக நகர்த்திக்கொள்கிறது. சின்னச்சாமியாக வரும் சின்னச்சாமியின்
தமிழுக்கே கோடி ருபாய் கொடுக்கலாம். கிராமிய தமிழ் சரளமாக கொட்டித்தள்ளுகிறது.
அடுத்து அந்த பணக்கார இளைஞன். பேச்சில் மலையாள வாடை அடித்தாலும், நைச்சியமாகப்
பேசி காரியத்தை சாதிப்பதில் மிக அருமையாக நடித்துள்ளார். நாயகிகளும் தங்கள்
பகுதிகளை நன்றாகவே செய்துள்ளனர். ஆனாலும் தோழியாக வரும் ஸ்வேதா தான் கொள்ளை அழகு.
அடுத்த படத்தில் அவர் நடிப்பார் என நம்புவோமாக.
படத்தில் கேமரா நன்றாக இருக்கிறது என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
உடலோடு ஒட்டிய கேமரா வைத்து படம் பிடித்தது எல்லாம் சரிதான். ஆனால் அது எத்தனை
பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. சினிமா பற்றி ஓரளவு தொழில்நுட்ப ஞானம்
இருந்த நண்பரோடு சென்றிருந்ததால் எனக்கு அர்த்தம் புரிந்தது. இல்லை என்றால்
“என்னடா இது கருமம் கேமரா இப்படி ஆடுது” என்று நொந்து கொண்டிருப்பேன். ஞான
சூன்யங்களையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாமா?
இன்றைய தொழில்நுட்பங்களை இளசுகள் எப்படி தவறாக
பயன்படுத்துகின்றனர் என்று இயக்குனர் கூறும் பிரச்சனை கவனத்துக்குரியதே. படத்தில்
வரும் மாணவி போல அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன
செய்கின்றனர் என்று கண்கொத்திப்பாம்பாக இருக்க வேண்டிய காலம் என்று சொல்ல
வருகிறார். இன்ஸ்பெக்டர் ஏழை இளைஞன் மனதை மாற்றுவதும், திரை மூடும் வேளையில் 'வானத்தையே எட்டி புடிப்பேன்' பாடலின்
பின்னணியோடு ஜோதியின் திரை விலகுவதும் அருமையான காட்சிகள்.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. முதல்
பாதியில் படம் ஊர்கிறது. இருவர் வாக்குமூலங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அல்லாமல் மாற்றி
மாற்றி கூறியிருக்கலாம். இரண்டாவது பாதியில் தான் படமே நிமிர்ந்து நடக்கிறது. வேலு
தவறு செய்யவில்லை என்று நமக்குத் தெரிந்தாலும் அது வரை அவனை கரித்துக்கொட்டும்
ஜோதியும் அவள் அம்மாவும் எப்படி சின்னச்சாமி வந்து சொன்னவுடனேயே உண்மை தெரிந்து
மனம் மாறுகின்றனர்? தவறு செய்த பின்னும் தன் காதலை காப்பாற்றிக்கொள்ளும் வேலுவின்
கடைசி முயற்சியாக சின்னச்சாமியின் அழுகையை ஜோதி எடுத்துக்கொள்ளக் கூடாதா? அதே போல்
தான் முடிவும். திடீரென்று இயக்குனர் ஒரே ஓட்டமாக ஓடி மொத்த வில்லன் கூட்டத்தையும்
இரண்டே காட்சிகளில் தண்டித்து விடுகிறார். முதல் பாதியை கொஞ்சம்
சுருக்கியிருந்தால் இந்த ஓட்டம் தேவைப்பட்டிருக்காதோ என்னவோ?
உட்கார்ந்து யோசித்தால் இது உலக சினிமா
கிடையாது. இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டுக்களே
எதிர்மறை விமர்சனங்களுக்கு வித்திடலாம். இருந்தாலும் ஒரு நல்ல படம் வந்துள்ளது.
இந்த படத்தைக் கூட குப்பை என்று ஒதுக்கும் அளவுக்கு நம் தமிழ் சினிமாவில் சிறந்த
படங்கள் நாளுக்கொன்றாக வருவதில்லை. ஒரு வேளை தரமான படங்கள் அதிகமாக
வந்துகொண்டிருந்தால் பாலாஜியும் பெருமளவு மெனக்கெட்டு இந்தப்படத்தின் தரத்தை
இன்னும் உயர்த்தியிருப்பாரோ என்னவோ?