Saturday, 24 March 2012

யார் இந்த தில்லையாடி வள்ளியம்மா?

குருவி – தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கும் இன்னபிற தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பொருட்களை எடுத்துச்செல்லும் குருவிகளைப்பற்றியும் அவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைப்பற்றியும் அதை விட கொடுமையாக கல் குவாரிகளில் வேலை செய்யும் கொத்தடிமைகளின் அவலநிலை பற்றியும் கதையில்(?) இருந்தாலும், விஜய்யின் வீர தீர பராக்கிரமங்களை மட்டும் காட்டும் படம். படத்தைப்பற்றி இங்கு விமர்சிக்கப்போவது இல்லை. நிஜ சிட்டுக்குருவிகள் அழிந்து போன, பாரதியின் ‘விட்டு விடுதலையாகி நின்ற சிட்டுக்குருவி’ மறந்து போன இன்றைய சமூகத்தில் குருவி என்றதும் நம் மனதில் வந்து அமர்வது இந்தக்குருவி தான். கடவுளே!

இந்தப்படத்தில் வரும் ஒரு பாட்டு ‘மொழ மொழன்னு யம்மா யம்மா’.

பாடல் தொடங்கி தோராயமாக 40 வினாடிகளில் வரும் வரி.

‘தில்லையாடி வள்ளியம்மா
தில் இருந்தா நில்லடிம்மா
தில்லாலங்கடி ஆடுவோமா
திருட்டுத்தனம் பண்ணுவோமா’

நானும் ஆர்வமாக ‘யாருடா இந்த தில்லையாடி வள்ளியம்மா; விஜய் படத்தின் வரிகளில் வரும் அளவுக்கு அவ்ளோ பெரிய அப்பாடக்கரா’ என்று யோசித்து அவரைப்பற்றி தேடினேன்.

தில்லையாடியில் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்த முனுசாமி-ஜானகி தம்பதி நெசவுத் தொழில் படுத்துவிட்டதையடுத்து, கூலி வேலை செய்து பிழைக்க தென்னாப்பிரிக்கா சென்றனர். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் தங்கிய முனுசாமி சிறு கடை வைத்து உணவு பண்ட வணிகம் செய்து வந்தார். 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று வள்ளியம்மை பிறந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் நிலை படு மோசம். கூலிகளாக நடத்தப்பட்டனர்; என்ன கொடுமை செய்தாலும் எதிர்த்துக் கேட்க முடியாது; எஜமானை விட்டு வேறு எஜமானிடம் செல்ல முடியாது; பொது இடங்களில் அவமானப்படுத்தப்பட்டனர்; வாக்குரிமை கிடையாது; வெள்ளையரோடு பயணம் செய்ய கூடாது; எவ்வளவு படித்திருந்தாலும் மனிதர்களைப்போல் நடத்தப்படவில்லை. இவர்கள் வாழும் பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளாகவே இருந்தன. இந்நிலையில் 14-3-1913 அன்று ‘கிறித்தவர் சடங்குப்படி நடந்து, பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே செல்லும்; மற்ற திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியாகாது’ என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் மணமான இந்துப் பெண்கள் சட்டபூர்வ மனைவி தகுதியை இழந்து வைப்பாட்டிகளாக கருதப்படுவர். கணவன்-மனைவி-பிள்ளைகள் ஆகிய பந்தங்கள் அறுக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்து, பெண்களை கஸ்துரிபா தலைமையில் ஒன்றிணைத்தார். வள்ளியம்மையும் அவர் தாயார் ஜானகி அம்மையாரும் போராட்டத்தில் இறங்கினர். 29-10-1913 அன்று ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு மகளிர் சத்தியாகிரகப் போர்ப்படை புறப்பட்டது. போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் எல்லையைக் கடந்து நட்டாலுக்குள் நுழைய முற்படும்போது வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில் 1913 திசம்பர் 22 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. 15 வயதில் வள்ளியம்மை சிறையில் அடைக்கப்பட்டார். உரிய அபராதத் தொகையைக் கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுபடுலாம் எனக் கூறியும் வள்ளியம்மை கேட்கவில்லை. உடல்நிலை மோசமானதால் தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக 11-2-1914 இல் விடுவிக்கப்பட்டார். எலும்பும் தோலுமாக வெளிவந்த வள்ளியம்மையை ஒரு சமக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குச் சுமந்து சென்றனர். நோயிலிருந்து மீளாமலேயே 22-2-1914 அன்று பதினாறு வயதில் மரணம் அடைந்தார்.



ஒருவர் வள்ளியம்மாவிடம் “ஏன் நீங்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்கர்களாக மாறிவிடக்கூடாது? இந்தியர்கள்! இந்தியாவிற்கென்று ஒரு கொடி கூட கிடையாது! நீங்கள் எதற்காக போராடுகிறீர்கள்?” என்றார். அதற்கு “ஒரு கொடி தான் இந்தியாவிற்கு உருவம் கொடுக்கும் என்றால், இதோ” என்று சேலை முனையை கிழித்து, “என் கொடி! என் தாய்நாடு!” என்று முழக்கமிட்டார். அவர் கிழித்த சேலையின் நிறம் தான் இன்றும் நம் தேசியக்கொடியில் இருக்கும் காவி, வெள்ளை, பச்சை. இந்திய விடுதலைப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து கொடிகளிலும் இந்த மூன்று நிறங்கள் இருந்தன. அதன் பாதிப்பில் தான் இப்பொழுது இருக்கும் தேசியக்கொடியும் உள்ளது.

ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாராம் ஆவேசமாக!

காந்தி வள்ளியம்மையிடம் கேட்டார், "சிறைக்குச் சென்றது உனக்கு வருத்தமாக இல்லையா? உன் நிலையைப்பார்!"

"மறுபடியும் சிறைக்குச் செல்வதால் என் போராட்டம் வெல்லும் என்றால் நான் செல்ல தயார்" என்றாராம் வள்ளியம்மை.
 

‘இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தி “இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்! என் அண்ணனின் மரணத்தை விட வள்ளியம்மையின் மரணம் என்னை அதிகம் பாதிக்கும்” என்று எழுதினார். மகாத்மா காந்தி தில்லையாடி வந்த பொழுது மண்ணை தொட்டு வணங்கினார் என்று கூறப்படுகிறது.


ஒரு பெண். தன் தாய்நாட்டை பார்த்திராத போதும் அதன் விடுதலைக்காக போரிட்டவர். நாம் 15வது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வைப்பற்றி புலம்பிக்கொண்டிருந்தோம். இந்த பெண் தன் நாட்டிற்காக சிறை சென்று இறந்தாள். நாம் நமது விடலைப்பருவத்தை சுவைத்துக்கொண்டிருந்த வயதில் இந்த பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போரிட்டாள்.
அந்தப்பெண்ணை நமது தமிழ் சினிமா எவ்வளவு கேவலமாக சித்தரித்துள்ளது. அது சரி! ‘புரட்சி’, ‘தளபதி’ ஆகிய சொற்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்திய தமிழ் சினிமா கலைஞர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

இந்தப்பாடலை எழுதியவர் ‘வித்தக கவிஞர்’ பா. விஜய். என்ன மட்டமான வித்தைடா இது? பாடலின் எதுகை மோனை அழகுக்காக ‘தி’ என்று தொடங்கி ‘மா’ என்று முடியும் ஒரு வரி வேண்டும் என்ற ஒரே ஒரு அல்ப காரணத்திற்காக ஒரு புரட்சிப்பெண்ணை இழிவுபடுத்தியிருக்கின்றார். இவர் வள்ளியம்மையின் பெயரை பயன்படுத்தியதால், இவருக்கு தில்லையாடி வள்ளியம்மையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் தோன்றுகிறது.

16 வயதில் இறந்த பெண் என்ற எண்ணம் இல்லை.
விடுதலைப் போராளி என்ற மரியாதை இல்லை.
அவர் செய்த செயல்களை எண்ணிப்பார்ப்பது இல்லை.
பாட்டின் தன்மை, வள்ளியம்மையின் பெயரை பயன்படுத்தினால் அறியப்போகும் பொருள் பற்றிய உணர்வு இல்லை.

விஜய் திரிஷாவை ‘திருட்டுத்தனம்’ பண்ண கூப்பிட, யார் பெயரை வேணுமானாலும் பயன்படுத்தலாம். அப்படிதானே? காசுக்கு தான் திரைப்பாடல் எழுதுகிறார் என்றாலும் ஒரு எழுத்தாளரே இவ்வளவு பொறுப்பற்று இருந்தால் இந்த சமூகம் எப்படி விளங்கும்?

இதில் நமது தணிக்கைக்குழு (சென்சார்) வேறு தனது கையாலாகாத்தனத்தை பதிவு செய்துள்ளது. படத்தில் இந்த பாடல் வரி “தில்லுமுல்லு வள்ளியம்மா” என்று மாற்றப்பட்டுள்ளது. அது நல்லது என்றாலும் பாடல் வெளிவந்து இரண்டு மாதங்கள் பின் தான் படம் வெளியாகிறது. பாடல் வெளியாகும் போது அதை தணிக்கை பண்ணமுடியாத போது, படத்தில் தணிக்கை செய்து என்ன பிரயோஜனம்?

இங்கு தில்லையாடி வள்ளியம்மா என்று வரும் வரி, இங்கு தில்லுமுல்லு என்று உள்ளது. படத்தில் எப்படி இருந்தாலும் மனதில் இருப்பது என்னவோ முதலில் கேட்கும் ஒலி வடிவம் தான்.

பேஸ்புக் அடையாளப்படம் மாற்றுவது, உணர்ச்சி பொங்க ஸ்டேட்ஸ் எழுதுவது, அதை விரும்புவது என்று இவைகளை செய்து விட்டால் மட்டுமே விடுதலை வீரர்களை கௌரவித்துவிட்டதாக நினைத்து புளகாங்கிதம் அடைகிறோம் நாம். இது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். சிந்திப்போம்.